/indian-express-tamil/media/media_files/2025/09/23/appavu-3-2025-09-23-16-18-13.jpg)
“தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26 (1)-ன் கீழ் சட்டப்பேரவைக் கூட்டம் அக்டோபர் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், மார்ச் 14-நம் தேதி 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதையடுத்து, மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என்று சபாநாயகர் மு.அப்பாவு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவை விதி 26 (1)-ன் கீழ் பேரவைக் கூட்டம் அக்டோபர் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதிக்கு அனுமதி அளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.