நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதலமச்சராக பதவியேற்றார். இதையடுத்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரா தாராபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை சபாநாயகராக கீழ்ப்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றும் உயிரிழப்புகளு அதிகரித்தனர். தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு, மாநிலத்தில் தினசரி கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருகிறது.
கொரோனா தாக்கம் குறைந்தவுடன், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைபெறும், முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாலை சந்தித்தார். அப்போது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றனர். சட்டப்பேரவை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதால் அதில் உரையாற்ற கவர்னருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை ஜூன் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஜூன் 9) மாலை செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதன் பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம். ஜனநாயக முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். கட்சி அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடத்தப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அனைவரையும் அரவணைத்து செல்வதில் உறுதியாக உள்ளார்.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.