சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது பதாகைகளுடன் வந்த அ.தி.மு.க உறுப்பினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜனவரி 6) 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் நாள் அமர்வின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மற்றொரு நபரின் தொடர்பு இருப்பதாகவும் அந்த நபர் யார் என்று கேள்வி எழுப்பும் விதமாக, அ.தி.மு.க உறுப்பினர்கள், ‘யார் அந்த சார்’ என்று பேட்ஜ் அணிந்து பதாகையுடன் வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை நிகழ்த்தாமலே சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்கு, சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்பட வேண்டும். இதை பலமுறை வலியுறுத்தியும் செய்யாததால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில், இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 3வது நாளில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அ.தி.மு.க-வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு-விடம் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையன்று நடந்தவற்றை எவறாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் உரையன்று உரிமை மீறலில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையானது அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விதிகளை மீறிய அ.தி.மு.க-வினர் மீது என்ன நடவடிக்கை? என நான் கேட்டதை ஏற்று, உரிமை மீறல் குழு விசாரிக்கும் என நீங்கள் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். எனினும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என உறுதியளித்தால் நடவடிக்கையை திரும்ப பெறலாம் என்று பேசினார். இதையடுத்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.