சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பழைய நிலையே நீடிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. 2023 ஆம் ஆண்டின் தொடக்க கூட்டத் தொடர் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார். பின்னர் தமிழில் அதனை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெறும். பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இதையும் படியுங்கள்: பொங்கல் பரிசு வழங்கும் தேதி திடீர் மாற்றம்: எந்தெந்த தேதிகள் என அரசு அறிவிப்பு
இந்தநிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பேரவைத் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்கும். அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்று கூறினார்.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை, என்றும் அப்பாவு கூறினார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என பழனிச்சாமி கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார். அதன் மீது ஏற்கனவே விளக்க உரையை வழங்கியுள்ளேன். அதற்கு இரு தரப்பினரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவே முந்தைய நிலை நீடிக்கிறது” என தெரிவித்தார். அதன் அடிப்படையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil