தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அ.தி.மு.க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மார்ச் 17-ம் தேதி விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
மேலும், “அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இது ஒன்னும் புதுசு கிடையாது, அது சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அ.தி.மு.க ஏற்கனெவே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது.
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மார்ச் 17-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக சபாநாயகர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிக நேர பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம். யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்னை என சட்டமன்றத்தில் பதில் அளித்து உள்ளேன். இனி அப்படி ஒன்றும் நடைபெறாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக மார்ச் 17-ம் தேதி பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும்.” என்று கூறினார்.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் நடக்கும்போது சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கையில் இருக்கமாட்டார். அப்போது துணைசபாநாயகர், அல்லது வேறு சடமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள். அப்போது, வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படும்.