பொது வெளியில் கசிந்த ஆளுனர் கடிதம்... அதிர்ச்சி அடைந்ததாக அப்பாவு பேச்சு
உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என ஆளுநர் குறிப்பிட்டிருப்பதை குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, இந்தக் கடிதம் வெளியில் கசிந்தது சரியல்ல என்றார்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்டமசோதா, பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதவுக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாஜக வெளிநடப்பு செய்தது.
Advertisment
கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் ஆன் என் ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினர்.
இதை தொடர்ந்து, இன்று நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் விளக்கக் கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.
அவர் கூறியதாவது, " நீட் தேர்வில் விலக்கு கோரியதற்கு ஆளுநர் அளித்த பதில் கடிதம், பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என உரியவர்கள் எண்ணி உணர வேண்டும்.ஏனென்றால், பேரவையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமுன்முடிவு, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு மறு ஆலோசனைக்கு உட்படுகிறது என்கையில் அது பொதுவெளிக்கு அனுப்பப்படாது.
எனக்கு நேரடியாக வந்த அறிக்கையின் நகல் மட்டுமே பேரவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. வேறு யாருக்கும் தெரிவிக்கவில்லை.
இப்படி பேரவைக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டு விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் வித்திட்டது ஏற்புடையது அல்ல. சம்பந்தப்பட்டோர் யோசித்து பார்க்க வேண்டும்.
நீங்கள் வேண்டுமானால் தமிழ்நாடு பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட சட்டமுன்முடிவை பொதுவெளியில் வெளியிட்டது ஏன் என கேட்கலாம்.
பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பரிந்துரையை ஆளுநர் காலதாமதப்படுத்தி பார்க்கும் போது, அதுகுறித்து அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் பொதுவெளியில் வெளியிடவோ விவாதிக்கவோ ஜனநாயக ரீதியாக உரிமை இருக்கிறது. எனவே இவ்விவகாரத்தில் ஆளுநர் விரைவாக பரிந்துரையை பார்த்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்னை பொறுத்தவரை எனது பொறுப்பிலிருந்து கடுகளவும் தவற மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil