மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
"தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதற்கு சென்னையில் நான்கு வணிக வளாகங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த பணிகளை நடத்துவதற்காக 15 சிறப்பு முகாம்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறப்பு முகாமை தலைமை செயலகத்திலும் அமைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2.66 கோடி மின் இணைப்புகளில் 1.03 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை மக்களுக்கு மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன்பிறகு, எவ்வளவு எண் இணைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி அவரது ஒப்புதலை பெற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மக்கள் மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்கு எடுக்கும் முயற்சியை பொறுத்து கூடுதல் முகாம்கள் அமைப்பதை திட்டமிடவுள்ளோம்.
இது தொடர்பான தகவல்களை தமிழக மாவட்ட அதிகாரிகள் சேகரித்து வழங்குவார்கள். இதைவைத்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்காத மின் இணைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முடிவுசெய்யப்படும்.
ஆதார் எண் இணைப்பதால் ஏற்கனவே உள்ள மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான வகையிலும் அச்சப்பட தேவையில்லை", என்று அவர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil