அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பாக 6 முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் விதமாக வார இறுதி நாள்களில் சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது.
நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற 6 முருகன் கோயில்களை தரிசிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பயணிகள் இடையே நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதன்பேரில், பக்தர்களின் வசதிக்கேற்ப தற்போது சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில், எண்கண் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலன் ஆலயம், பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (நாகப்பட்டிணம் மாவட்டம்), ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை அருள்மிகு. சுவாமிநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்கிறது.
போக்குவரத்துத்துறை அலுவலர்கள், இந்தப் பேருந்தை சிறப்பு முறையில் பராமரித்து குறித்த நேரத்தில் இயக்கி காலதாமதம் இல்லாமல் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் இப்பேருந்து இயக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு உணவு இடைவேளை, கோயில்களை சுற்றிக் காண்பிப்பதற்கு சிறப்பு நபர் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். www.tnstc.in இணையதளம் மற்றும் செல்போன் அப்ளிகேஷன் மூலம் இப்பேருந்தில் பயணிக்க முன்பதி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“