கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (நவம்பர் 17ஆம் தேதி - வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இக்கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
இந்தாண்டின் கார்த்திகை பிறப்பதனால், தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் முறையான விரதத்தை (மாலை அணிவித்து 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பது) மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதனால், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கத்தில் விட ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மக்களால் அறியப்படும் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து பயன்படும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டும் நவம்பர் 17-ந் தேதி (இன்று) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு கூடுதல் பேருந்துகளை இயக்கத்தில் விட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC எனப்படும் செயலி மூலமும் மக்கள் அணுகலாம்.
மற்ற விவரங்களுக்கு 94450-14452, 94450-17793 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil