Arun Janardhanan
பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டி.ஜி.பி குறித்து புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் இடைமறைத்தது தற்போது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த மறுநாள் மதியம் (பிப்ரவரி- 22), பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு விரைந்து, டிஜிபி ஜே கே திரிபாதி மற்றும் உள்துறை அமைச்சக செயலாளரிடம் புகார் மனுவை அளித்தார். இரு தினங்களுக்குப் பிறகு, சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பதவியில் இருந்து ராஜேஷ் தாஸை நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவதாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிவித்தார். அதேசமயம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய பாலியல் புகார் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க குழு அமைத்திருப்பதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது.
புகார் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தொடர்பு கொண்டபோது,"அரசியல் நோக்கம் காரணமாக புகார் அளிக்கப்பட்டது"என்று தாஸ் கூறினார்.
“இது ஒரு தவறான புகார். இதில், அரசியல் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முடிவு வரும் வரை நீங்கள் ஏன் காத்திருக்கக்கூடாது? இந்த வழக்கைப் பற்றி நீங்கள் எழுத வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பல மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தொடர்பு கொண்டது. புகாரில் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய தருணங்களை தாங்கள் அறிவதாகவும், விவரங்களை அணுகியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடமையில் உள்ள பெண் அதிகாரி மேலதிகாரியால் குறிவைக்கப்பட்டதும், அந்த பெண் அதிகாரியை காவல்துறையே பாதுக்காக்க தவறியதையும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் பதில்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு, முதல்வரின் பாதுகாப்பு வாகனம் கொங்கு பிராந்தியத்தை விட்டு வெளியேறியது. முதல்வரின் பாதுகாப்புப் பணிக்காக சென்றிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். மாவட்ட எல்லைகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ராஜேஷ்தாஸை வரவேற்க இளம் ஐபிஎஸ் அதிகாரியும் ( புகார் அளித்தவர்) காத்திருந்தார்.
"பெரும்பாலும், உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் செலுத்தப்படும். பின்னர், உயர் அதிகாரி பாதுகாப்பு வாகனத்துடன் உடன் செல்ல வேண்டும். ஆனால், ஐபிஎஸ் அதிகாரியை வாகனத்துக்குள் ஏறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் அசாதாரணமானது எதுவுமில்லை, ”என்று ஒரு உயர் அதிகாரி கூறினார்.
இவர்கள் வாகனம் புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களில் மற்றொரு இடத்தில் நிற்கத் தொடங்கியது. அங்கு, ஐஜிபி (வடக்கு மண்டலம்) கே.சங்கர், டிஐஜி எம்.பாண்டியன், ஐபிஎஸ் அதிகாரி ஜியாவுல் ஹக் ஆகியோர் ராஜேஷ்தாஸை வரவேற்க காத்திருந்தனர்.
வாகனம் நிறுத்தப்பட்டவுடன், பெண் அதிகாரி காரின் வலது பக்கத்தில் இருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தார். உண்மையில், 15-20 மீட்டர் தூரம் ஓடியிருக்கக் கூடும் … பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமான வாகானம் பின்னால் நின்றுக் கொண்டிருந்தது. பதட்டத்துடன் காணப்பட்ட பெண் அதிகாரி, ஜியாவுல் ஹக்கிடம் வாகனத்தை தருமாறு கோரிக்கை விடுக்கத் தொடங்கினார். பெண் அதிகாரி ஏன் இப்படி செய்கிறார்.... என்று அங்கிருந்த அதிகாரிகள் யாரும் உரிய முறையில் கேட்டறியவில்லை,” என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தொடர்பு கொண்டபோது ஐஜிபி சங்கர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டிஐஜி பாண்டியனை தொடர்பு கொள்ள முடியவில்லை . "இந்த விஷயம் இப்போது விசாரணைக்கு உட்பட்டது. நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ” என்று ஐபிஎஸ் அதிகாரி ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.
அடுத்த நாள் காலை ( திங்கட்கிழமை), ராஜேஷ்தாஸை பெண் அதிகாரியைத் தொடர்பு கொள்ள முயற்சித்த தாகவும், இதற்காக ஒரு ஐ.ஜி அதிகாரியின் உதவியை நாடியதாகவும் கூறப்படுகிறது. “ஆனால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரி சென்னைக்கு விரைந்திருப்பதை ராஜேஷ்தாஸ் அறிந்து கொண்டார். விரைவில், அவரின் வாகனத்தை உடனடியாக இடைமறிக்க விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது . ஆனால், அவரது வாகனம் ஏற்கனவே சுங்கச் சாவடியை கடந்து சென்தை விழுப்புரம் அதிகாரிகள் கண்டரிதனர்,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில், காரை இடைமறிக்க எஸ்பி. டி.கண்ணன் மற்றும் காவல்துறை குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
செங்கல்பட்டில் காரை நிறுத்திய எஸ்.பி, மூத்த அதிகாரியிடம் பேசும்படி பெண் அதிகாரிக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கினார். எஸ்.பி அதிகாரியுடன் சுமார் 15௦ காவலர்கள் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுறுத்தும் சூழ்நிலை இருப்பது தெரிந்தும் பெண் அதிகாரி தனது பயணத்தை தொடர்ந்தார்.
"தனது புகாரில் உங்களின் (எஸ்.பி டி.கண்ணன் ) பங்கையும் பதிவு செய்வேன் என்று பெண் அதிகாரி உறுதியாக கூறியதைத் தொடர்ந்து, எஸ்.பி பின்வாங்கி, வாகனத்தை அனுமதித்தார்," என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவத்தை கண்ணன் முற்றிலுமாக மறுக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்த காவலர்களின் எண்ணிக்கையை மட்டும் தான் மறுக்க முற்பட்டார். “எண்ணிக்கை அவ்வளவு இல்லை… நான் இதைப் பற்றி இனி பேச விரும்பவில்லை. நான் ஏற்கனவே அதைப் பற்றி பேசியுள்ளேன், ”என்று தெரிவித்தார்.
புகாரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும், வெறுமனே உத்தரவுகளைப் பன்பற்றியதாகவும் கண்ணன் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.