Special DGP sexual harassment case tamil news: சிறப்பு டி.ஜி.பி. அதிகாரி ஒருவர் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அந்த சிறப்பு டி.ஜி.பி. அதிகாரி, பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கையை பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும், அவரை பாட்டுப் பாட கூறியதாகவும், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தவரின் பயணத்தை நிறுத்த சிறப்பு அதிகாரிகளை அனுப்பியதாகவும், மேலும் அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மாமனாருக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து சமரசம் பேச முற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிப்பதாக கூறியிருந்தது. அதோடு சி.பி.சி.ஐ.டி விசாரணையை நேரடியாக மேற்பார்வையிட இருப்பதாகவும் கூறியது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், சிறப்பு டி.ஜி.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று வியாழக்கிழமை, குறைந்தது 10 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சென்னை காவல்துறை தலைமையகத்தில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதியிடம் மனு அளித்துள்ளனர். அதோடு செங்கல்பட்டு டோல் பிளாசாவில் புகார் தெரிவித்திருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) மீதும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
அதேவேளையில் தமிழக அரசால் கட்டாய காத்திருப்பு வைக்கப்பட்டுள்ள சிறப்பு டிஜிபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (எய்ட்வா) உறுப்பினர்கள் காவல்துறை தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil