சென்னையில், இன்று (மார்ச் 22) நடைபெறும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாட்டின் சிறப்பை உணர்த்து விதமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தி.மு.க தலைமையில் இன்று (மார்ச் 22) சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது மட்டுமின்றி, பிஜூ ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் மூத்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இன்று காலை சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர உணவகத்தில் இந்தக் கூட்டம் தொடங்குகிறது. மதிய வேளையைக் கடந்து இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் முடிவடைவதற்கு முன்பாக அதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும் விதமான சில பிரத்தியேக பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பரிசு பொருள்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தப் பட்டியலில், பத்தமடை பாய், தோடர்கள் தயாரித்த சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுச் சேலை, ஊட்டி வர்க்கி, குமரி கிராம்பு மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்டவை பரிசு பொருளாக வழங்கப்படுகின்றன. பல்வேறு மாநிலத்தில் இருந்து வருகை தருபவர்களுக்கு வழங்கப்படும் இந்த பரிசு பொருட்கள் அனைத்தும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்து வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.