அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ளார்.
அரசாணையின்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி வழங்க சிறப்பு பி.எட். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கான பிரத்யேக விதிகள் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.
இக்கோரிக்கை தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்.சி.இ.ஆர்.டி) மற்றும் இந்திய புனர்வாழ்வு குழுமம் (ஆர்.சி.ஐ) வெளியிட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகளின்படி, நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். எனினும், சில விதிகள் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்தான் (பணியாளர் நலன்) சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன அதிகாரியாகச் செயல்படுவார். பொதுப் பிரிவில் 53 வயதையும், மற்ற பிரிவுகளில் 58 வயதையும் பூர்த்தி செய்தவர்கள் இந்தப் பணியில் சேரத் தகுதி இல்லை. பணியில் சேருபவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட் - TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இந்தப் பணியிடங்களுக்கான 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தகுதிகளின் அடிப்படையிலேயே சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.