போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் குடிசைவாசிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்ணுரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் தாராளமாக கிடைப்பதாக அட்வகேட் கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது போலீஸ், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை போதுமானது அல்ல. திருப்திகரமான நடவடிக்கைகள் இல்லையென்றால், இந்த பிரச்னையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டியது வரும்' என, கூறியிருந்தது.
இந்த வழக்கு, முதல் அமர்வில் நேற்று (செப்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினர்.
அப்போது போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்ளதாகவும், கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி, இந்த குழுவை கண்காணிப்பார் என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட மற்றும் தாலுகா அளவில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பிய முதல் அமர்வு, இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“