சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்று விசாரணையைத் தொடங்கியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க, த.வெ.க, நா.த.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் போனில் சார் அழைத்துப் பேசியதாகவும், அதனால், யார் அந்த சார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
அண்ணா நகர் துணை ஆணையர் சிநேக பிரியா, துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று (02.01.2025) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எத்தனை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அவை செயல்படுகிறதா என்று விசாரித்தனர்.
முன்னதாக, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கோட்டூர்புரம் போலீசார், வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தனர். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“