மக்கள் கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுவது தவறானது. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கவலை தேவையில்லை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “சென்னையில் சில இடங்களில் பார்க்கும்போது மக்கள் கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. அதனால், மக்கள் நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியத்துடன் யாரும் இருக்க கூடாது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்கள் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வெளியே வரும்போது அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க், என் 95 போன்ற மருத்துவ முகக் கவசம்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அது போல மருத்துவ முக்கக்கவசம் இல்லையெனில், துணியை இரண்டு மடிப்பாக மடித்து முகக் கவசம் போல பயன்படுத்தலாம்.
பொது மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு பைக் ஆம்புலன்ஸ் மூலம் குறுகிய சாலைகள், தெருக்கள் வழியாக ஏற்படுத்தி வருகிறோம். தேவையான மக்களுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளை அந்தந்த துறை மருத்துவரின் ஆலோசனையுடன் கொடுக்கிறோம். கோவையில் வைட்டமின் சி உள்ள ஜூஸ் குடித்தால் நல்ல பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதனால் ஆதாரங்களின் அடிப்படையில் மருத்துவ ரீதியாக நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க கூரியிருக்கிறோம். மருத்துவமனைகளில் உள்ள லிஃப்ட்களில் சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லியிருக்கிறோம்.
அறியப்படாத குடிசைப்பகுதிகளிலும் விழிப்புணர்வு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது ஊரடங்கு எனபதில் இருந்து குடிசைப் பகுதிகளில் சுயக்கட்டுப்பாடு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளி தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். கூட்டத்தை தவிர். பொது இடங்களில் எச்சில் துப்பாதீர். கடைக்கு சென்றுவந்தால் கை கழுவுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேசும்போது சிலர் முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டு பேசுகின்றனர். இது தவறானது. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போதுகூட முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் உணவு மற்றும் காய்கறிகள் டெலிவரி செய்யும் நபர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. அதனால், தன்னார்வலர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உணவகங்களிலும் மார்க்கெட்களில் பணியாற்றுபவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.