சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன், 'போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
ஆர்.கே.நகரில் யாரும் இந்தளவிற்கு எதிர்பார்க்காத அசாத்திய வெற்றியை சுயேட்சையாக போட்டியிட்டு பெற்ற தினகரன், எப்படியும் அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன், 'போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பை நேற்று தொடங்கியுள்ளார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன் தனது முகநுாலில், “சுபாஷ் சந்திர போஸ் பெயரில் மக்கள் பணியகம் துவங்கி உள்ளேன்” என்று வெளிப்படையாக அறிவித்தார். அந்தப் பதிவில், “மாவீரன் #சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பெயரில் ஒரு மக்கள் பணியகம் அமைக்கபட்டு, என்னை சந்தித்த இளைஞர்கள் மற்றும் சந்திக்க இருக்கும் இளைஞர்கள் ஒரு குடையின் கீழ் மக்கள் பணியாற்ற ஒரு இயக்கம் தொடங்கப்படும்.
இதில், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்கும் வகையில் நமது சக்திக்கேற்ப தொண்டுகளைச் செய்ய இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள தனியாக ஒரு சமூக தளம் உருவாக்கப்படும். அதில், மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்களுக்குத் தீர்வுகாண கடும் முயற்சி எடுக்கப்படும். என்னை சந்திக்க வந்த அனைத்து இளைஞர்களும் நீங்கள் இதுவரை செய்துவந்த சமூகப் பணிகளில், எங்களை நாங்கள் சரியாக ஈடுபடுத்திக்கொள்ள ஒரு மையப் புள்ளி இல்லை.
அதனால், நாங்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்து பணியாற்றவும், உங்களுடனும் உங்கள் ஆதரவாளர்களுடனும் கடைசிவரை தொடர்பில் இருக்கவும் பயன்படும் எனத் தெரிவித்து, என்னை ஒரு மக்கள் பணியக இயக்கத்தை ஆரம்பிக்கச் சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டே மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரில் மக்கள் பணியகம் தொடங்கப்படுகிறது” என்று அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.