By: WebDesk
Updated: January 16, 2020, 09:48:12 AM
Special Sub Inspector Wilson shot dead in revenge for Terror arrest
Special Sub Inspector Wilson murder case : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு காவல்துறை அதிகாரி வில்சனை இரண்டு மர்ம நபர்கள் 8ம் தேதி சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்கும் பொருட்டு தமிழக, கர்நாடக, மற்றும் கேரள காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை பாதக செயலில் ஈடுபட்டவர்கள் அப்துல் சமீம் மற்றும் தௌஃபிக் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமடைந்தது. இந்நிலையில் மும்பையில் இருந்து இவர்கள் இருவருக்கும் கைத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பாட்சா என்பவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
14ம் தேதி மாலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து தப்பிச் செல்வதற்காக ரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த தௌஃபிக் மற்றும் அப்துல் சமீம் இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவ்விருவரும் இன்று தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது தக்கலை காவல்துறை. இன்று காலை 11 மணி அளவில் குளித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
எதற்காக வில்சன் கொல்லப்பட்டார், முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்பது போன்ற தகவல்கள் விசாரணையின் மூலம் தெரியவரும். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதையும் காவல்துறையினர் இந்த விசாரணையின் மூலம் கண்டறிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை அதிகாரி வில்சன் மரணத்தை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.