இரண்டாவது வாரமாக தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தநிலையில், வியாழக்கிழமை முதல் தனியார் பேருந்துகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று (ஆகஸ்ட் 19) தெரிவித்தார். மேலும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பேருந்துகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் போக்குவரத்துத்துறை ஆணையரால் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்த 97 பயணிகளுக்கு ஆம்னி பேருந்துகளிலிருந்து மொத்தம் ரூ.68,090 பணம் வசூலித்து திரும்ப கொடுக்கப்பட்டது. அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்களுக்காக ஆம்னி பேருந்துகளிலிருந்து ரூ.11.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.
"தொடர் விடுமுறையையொட்டி, வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 22 வரை சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தனியார் பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்து புகார் வந்தால் சம்மந்தப்பட்ட பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். அதோடு பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தொடர் விடுமுறை அளிக்கப்படும். அப்போது இப்பிரச்சனை வருவதை தடுக்கும் வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
பயணி ஒருவர் கூறுகையில், "தொடர் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. திருச்சிக்கான பேருந்து கட்டணம் ரூ.2000க்கு மேல் விற்கப்படுகிறது. ரூ.3000 வரை விற்கப்படுகிறது. பொதுவாக, ஏசி பேருந்து கட்டணம் ரூ.800 முதல் 1000 வரை இருக்கும் என்றார். தென் மாவட்டங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“