க.சண்முகவடிவேல்
தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரயிலை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம் ( ஐ.ஆர்.சி.டி.சி ) ஏற்பாடு செய்துள்ளது. பாரத் கவ்ரவ் சுற்றுலா ரயில் வரிசையில் இயக்கப்படும் இந்த ரயில் வரும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும்.
பின்னர் அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக ஜூலை 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, ஜூலை 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், ஜூலை 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்திய, பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின்னர், புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.
அதன் பின்னர் இந்தச் சிறப்பு சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. இந்த ரயிலில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ.22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil