3 நாட்கள் சிறப்பு ரயில்: சென்னை திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெறும் நிலையில், சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழாவை, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்களுக்கு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27ஆம் தேதி துவங்கியது.
இந்த தீபத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த திருவிழாவில் பங்குபெற தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகைதருகின்றனர்.
தொலைவில் இருந்து வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் திருவண்ணாமலை நோக்கி புறப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை, திருவண்ணாமலையில் இருந்து காலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை கடற்கரைக்கு வந்துசேரும்.
டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், தாம்பரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணாமலை நோக்கி செல்லும். அதேபோல் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம் நோக்கி பயணிக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil