துபாயில் இருந்து இன்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியது. இந்த விமானம் மீண்டும் 146 பயணிகளுடன் 12:50 மணிக்கு துபாய்க்கு கிளம்ப வேண்டும். இதற்காக பயணிகள் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறினர்.
பைலட்டுகள் விமானத்தில் ஏறி பார்த்தபோது முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. அதை மாற்றாமல் செல்ல முடியாது என்பதால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.
தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை ஆய்வு செய்த பிறகு விமானம் உடனடியாக கிளம்புவதற்கு சாத்தியமில்லை என தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நாளைதான் மீண்டும் விமானம் பறக்க முடியும் எனத் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்ததை அடுத்து பயணிகள் நாளை பயணிக்கலாம் என விமான நிறுவனத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், தேவைப்படுபவர்கள் கேன்சல் செய்து கொள்ளலாம் என்றும் விமான நிறுவனம் அறிவிப்பு செய்தது. இதையடுத்து பலர் கேன்சல் செய்து சொந்த ஊருக்கு திரும்பினர்.
விமானம் தரையிறங்கும் போது எவ்வித பிரச்சினையும் இல்லை, ஆனால், விமானம் இறங்கி நின்ற போதுதான் கண்ணாடி உடைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. விமானம் பறக்கும்போது அல்லது ரன்வேயில் வரும்போது உடைப்பு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆகையால் இது வந்து நின்ற பின்பு ஏற்பட்ட விரிசல் என்பதால் மீண்டும் விமானத்தை இயக்கும்போது விமானி கண்டுள்ளார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்தின் முன்பக்க கண்ணாடி சென்னை அல்லது பெங்களூரில் இருந்து வர வேண்டும் என்பதால் நாளை வரவழைக்கப்பட்டு, அதை சரி செய்த பின்னர் தான் விமானம் கிளம்ப இயலும் என்பதால் பெரும்பாலான பயணிகள் பெரும் விரக்தி அடைந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“