கிறிஸ்டி-யை தொடர்ந்து எஸ்.பி.கே.!: அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் ஐ.டி.!

எஸ்.பி.கே. நிறுவனம், அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாதுரைக்கு சொந்தமானது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனம் இது!

எஸ்.பி.கே. நிறுவனத்தின் அருப்புக்கோட்டை, சென்னை அலுவலகங்களில் ஐ.டி. எனப்படும் வருமான வரித்துறை வேட்டையாடி வருகிறது. கிறிஸ்டிக்கு பிறகு இப்போது எஸ்.பி.கே!

எஸ்.பி.கே. நிறுவனம், அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாதுரைக்கு சொந்தமானது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனம் இது!

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் அதிபர் செய்யாதுரை (வயது60), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர். அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

எஸ்.பி.கே. நிறுவனம் தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தப் பணியை செய்து வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

செய்யாதுரைக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இன்று (ஜூலை 16) காலை 6 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நுழைந்தனர். அவர்கள் அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் போலீசார் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட னர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மிக அண்மையில்தான் தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்திற்கு மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யும் கிறிஸ்டி நிறுவன அலுவலகங்கள், உரிமையாளர் இல்லம் ஆகியவற்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ1300 கோடி அளவுக்கு கணக்கில் வராத ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு விருதுநகரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் காமராஜ் என்பவர் நிறுவனங்கள், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி பகுதியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பலரும் இதேபோல ஐ.டி. ரெய்டில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதன் தொடர்ச்சியாக எஸ்.பி.கே நிறுவனமும் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியிருக்கிறது. இந்த ரெய்டில் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னை, அருப்புக்கோட்டை அலுவலங்கள் உள்பட 30-க்கும் அதிகமான இடங்களில் சோதனை தொடர்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close