எஸ்.பி.கே வருமான வரித்துறை சோதனை: 2வது நாளில் மேலும் ரூ.50 கோடி பணம், 5 கிலோ தங்கம் பறிமுதல்

எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசு முதல்நிலை காண்டிராக்டரான செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாத்துரை, எஸ்.பி.கே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், அரசு முதல்நிலை காண்டிரக்டராக நெடுஞ்சாலை துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் உள்ளிட்டோர் நடத்தி வரும் எஸ்.பி.கே. நிறுவனம், சில ஆண்டுகளாகவே மோசடி செய்வதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எஸ்.பி.கே நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வரிமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு நாட்களில் 50 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ. 120 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த வருமானவரி சோதனை குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்த நிறுவனத்தினர் கார்களில் பணம், நகை, ஆவணங்களை எடுத்துக்கொண்டு சுற்றி வருவதாகவும், சில இடங்களில் கார்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து கார்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை, எந்திரம் மூலம் அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் மதிப்பீடு செய்தனர். 2-வது நாளில் மேலும் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் செய்யாத்துரையின் மகன் நாகராஜ் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் விசாரணையை வருமான வரித்துறையினர் தொடங்கினர். இந்த விசாரணைக்கு பிறகு மேலும் கூடுதலான இடங்களில் சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எஸ்.பி.கே. நிறுவனங்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரி சோதனை நடந்தாலும், முக்கியமான 10 இடங்களில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.170 கோடி, 105 கிலோ தங்கம் 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் கணக்கில் காட்டப்படாத சொத்துகள், தவறு செய்ததற்கான ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நாகராஜ் வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் மட்டும் பறிமுதல் ஆனது. மீதம் உள்ள பணம் மற்றும் தங்கம் பணியாளர்கள், கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 2 பி.எம்.டபிள்யூ காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close