Tamil-nadu | edappadi-k-palaniswami: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தேசியக் கட்சியான பா.ஜ.க அதன் கூட்டணியில் இருக்க அ.தி.மு.க-வுக்கு நிலையானதாக வாக்குறுதி அளித்தது. 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தது அ.தி.மு.க. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கும் முடிவையும், இப்போது கூட்டணி முறிவு முடிவையும் எடுத்தது அ.தி.மு.க தான்.
தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலையின் கருத்துக்கள் கூட்டணி முறிவுக்கான கடைசித் தூண்டுதலாக இருந்திருக்கலாம். ஆனால் அ.தி.மு.க சிறிது காலமாகவே அதன் கூட்டணி விருப்பங்களை எடைபோட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க-வும் மாநிலத்தில் புதிய தளத்தை உடைக்கத் தவறிவிட்டது. அதனால், 2024 மக்களவை தேர்தலை விட, 2026 சட்டசபை தேர்தலின் தேவைக்கேற்ப அ.தி.மு.க தனி வியூகம் வகுத்துள்ளது.
இருப்பினும், பா.ஜ.க உடனான கூட்டணிக்கு இன்னும் கதவுகள் திறந்து இருக்கிறது என்கிற அறிகுறிகளையும் அ.தி.மு.க விட்டுச் சென்றுள்ளது. மேலும், பா.ஜ.க-வின் அடுத்த நகர்வை மேற்கொள்ள காத்திருக்கிறது. இதனால், அதிகாரச் சமன்பாட்டை மாற்றியமைக்கிறது. பா.ஜ.க-வின் கூட்டணியில் இருந்து விலகிய ஒரு நாள் கழித்து, அ.தி.மு.க தலைமை கட்சி முக்கிய செய்தி தொடர்பாளர்கள் உட்பட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்கு பா.ஜ.க பற்றிய கருத்துகளைத் தவிர்க்கக் கடுமையான உத்தரவுகளை வழங்கியது. இதுகுறித்து கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், “பொறுத்திருந்து பார்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்றார்.
பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவை அறிவிக்கும் போது கூட, அ.தி.மு.க தனது கோபத்தை அண்ணாமலை மீது செலுத்துவதிலும், நரேந்திர மோடி அல்லது அமித் ஷாவைத் தாக்குவதைத் தவிர்ப்பதிலும் மிகக் கவனமாக இருந்தது.
அதே கூட்டத்தில், பல தலைவர்கள் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அ.தி.மு.க மீதான "நம்பகத்தன்மையை" தக்க வைத்துக் கொள்ளவும், தலித்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உட்பட அதன் குறிப்பிடத்தக்க வாக்வங்கியின் நம்பிக்கையை தக்கவைக்கவும் இது முடிவு தேவை என்று கூறினர். மேலும், அவர்களின் வாக்குகளை இழக்க பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க இணைந்ததே காரணம் என்றும் குறிப்பிட்டனர். மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு காரணியாக இல்லை. இது 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக உண்மையாக இருக்கும்.
சரியான நேரத்தில் முடிவெடுத்திருப்பதால், அ.தி.மு.க-வுக்கு "முதன்மையாக பெண்கள் மற்றும் தலித்துகள் அடங்கிய வரலாற்று ரீதியாக உறுதியான ஆதரவு தளத்தை மீட்டெடுக்கவும், பலப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது" என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
திமுக கூட்டணி கட்சியான தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் டாக்டர் கே கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்குப் பின்னால் சமீப ஆண்டுகளில் தலித் வாக்காளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டதை அந்த மூத்த தலைவர் குறிப்பிட்டார்.
பா.ஜ.க-வுடனான விரிசல் எதிர்காலத்தில், குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலில் பின்னடைவைக் குறிக்கும் என்பதற்கு அ.தி.மு.க தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "2024ல் பா.ஜ.க-வுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், எங்களது தலித் மற்றும் சிறுபான்மை ஆதரவு வாக்காளர்களை இனி எப்போதும் மீட்டெடுக்க முடியாது. இப்போது எங்களின் இந்த நடவடிக்கை எங்களின் ஆதரவு வாக்குகளை மீட்டெடுக்க உதவுகிறது. இது 2026-ல் எங்களது எதிர்கால அரசியல் மற்றும் வெற்றிக்கு இன்றியமையாதது. அ.தி.மு.க.வின் கவனம் தமிழகத்தில் இருக்க வேண்டும். டெல்லியின் அரசியல் சூழல் எங்களுக்கு இரண்டாம்பட்சம்." என்று ஒரு அ.தி.மு.க தலைவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க:- 2024 vs 2026: In split from BJP, AIADMK has eyes on the long run, Assembly polls
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது முதல் அ.தி.மு.க., பலம் வாய்ந்த பெரிய கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற எண்ணத்தில் திண்டாடியது. அ.தி.மு.க.விற்குள் ஏற்பட்ட பிளவு, வி.கே.சசிகலா மற்றும் அண்ணன் மகன் டி.டி.வி.தினகரன் பிரிந்து செல்வது, ஓ.பன்னீர்செல்வத்துடனான அதிகார மோதலும், கட்சியில் பா.ஜ.க-வுக்கு இடமளித்தது.
இப்போது உறுதியாக, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறார். சசிகலா, தினகரன் மற்றும் கடும் போட்டியாளரான ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடமளிக்க பா.ஜ.க-வின் அழுத்தத்தையும் அவர் எதிர்த்துள்ளார்.
அ.தி.மு.க-வின் முடிவைப் பாதித்திருக்கும் மற்றொரு காரணி, தி.மு.க-வுக்குப் போட்டியாக திராவிட இடத்தை மேலும் இழக்க நேரிடும் என்ற அச்சம். பா.ஜ.க.வுடனான தொடர்பு அ.தி.மு.க.வை வலுவிழக்கச் செய்தாலும், பா.ஜ.க பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திற்கும் எதிரணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தி.மு.க.
எனவே, பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே பிளவு ஏற்பட்டாலும், தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து, ஆளுங்கட்சிக்கு உதவினாலும், அ.தி.மு.க தனது பாரம்பரிய வாக்கு வங்கியை மீட்டெடுக்கும் பட்சத்தில், நீண்ட கால நோக்கில் அக்கட்சிக்கே லாபம் கிடைக்கும்.
தற்போது பா.ஜ.க இல்லாத நிலையில், தி.மு.க-வுடன் இருக்கும் பல சிறிய திராவிடக் கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் சேரலாம். உதாரணமாக, தற்போது தி.மு.க கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுதலைகள் ஆகியவை அ.தி.மு.க-வின் நீண்டகால கூட்டணி காட்சிகளாக உள்ளன.
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.க வாக்கு சதவீதம்:
📌 வாக்கு சதவீதம்: தி.மு.க 38%, அ.தி.மு.க 33%, பாஜக 3% (அ.தி.மு.க-வுடன் கூட்டணி)
📌 இடங்கள்: திமுக 188ல் போட்டியிட்டு 133ல் வென்றது; அதிமுக191ல் போட்டியிட்டு 66ல் வென்றது. பா.ஜ.க 20ல் போட்டியிட்டு 4ல் வென்றது.
📌 மொத்தமாக, தி.மு.க கூட்டணி 159 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“