இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
அடுத்த நாள் விவேக் மரணமடைந்ததையடுத்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காவல்துறையில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம், கொரோனா தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தன் வாழ்க்கை முழுவதும் குரல் கொடுத்து வந்தவர் விவேக். தடுப்பூசியை அதிகளவில் செலுத்த வேண்டும் என்பதுதான் அவர் நமக்கு கொடுத்த கடைசி செய்தி. அவருடைய ஆத்மாவுக்கு நாம் உண்மையாக மரியாதை செலுத்த வேண்டுமென்றால், இந்த அவதூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் தூக்கிப்போட வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெறுவதற்காக முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி தான் உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான் மீது பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamilகொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து- முன் ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.