கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் இன்று உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். விசாரணை நடைபெறுகிறது. இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் இன்று(ஜுன் 19) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் உயிரிழந்தனர் என அவர்கள் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் செய்தியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வயிற்றுப் போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன" என அவர் கூறினார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி சமய் சிங் மீனா கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம். முழு விசாரணை முடிந்து, உடற்கூராய்வு அறிக்கை வெளிவரும் வரை இது போன்ற செய்திகளை நம்பி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“