இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலம் விடுப்படுகிறது.
இந்த ஏலம் விடும் பணி, பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களின் 135 படகுகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏலத்தின் முதல் நாளிலேயே 88 அடி நீளமுள்ள மீன்பிடி படகு இலங்கை ரூபாய் மதிப்பில் 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
மீனவர் படகுகள் ஏலம் தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அதில், " வட இலங்கை மீனவர்களுக்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்த நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இட நெருக்கடி மற்றும் டெங்கு,மாசுபாடு காரணமாக வடக்கு கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழைய, சேதமடைந்த மீன்பிடி கப்பல்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்திய மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தவிர வேறுவழியில்லை என குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை நிலவரப்படி, சுமார் 140 இந்தியக் கப்பல்கள் பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதவாது, "இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு உள்ளது. அதற்கு இணங்க, தமிழகத்தை சேர்ந்த ஒரு குழுவினர், இலங்கையில் மீட்க முடியாத இந்திய மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க அங்கு செல்ல திட்டமிட்டு அனுமதிக்காக காத்திருக்கிறது. இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் அனுமதி கோரியுள்ளோம் என தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil