இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பால் பதற்றம்; தலைவர்கள் கண்டனம்

இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழகத்தில், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

sri lanka, mullivaikkal victims war memorial, mullivaikkal memorial demolished in jaffna university, இலங்கை, முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வைகோ, முக ஸ்டாலின், திருமாவளவன், ராமதாஸ், சீமான், jaffna university, vaiko, mk stalin, thirumavalavan, ramadoss, seeman, mullivaikkal, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அங்கே பதற்றத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு, வைகோ, திருமாவளவன், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் வகையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்கால் நினைவிடம் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

அண்மையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட தமிழ் இன மக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இலங்கை ராணுவத்தினர் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக்த்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவம் இலங்கை தமிழ் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. இதனால், இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. இந்த சம்பவத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், தமிழகத்தில் வைகோ, திருமாவளவன், சீமான், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறீக்கையில் கூறியிருப்பதாவது: “இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து விட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.

இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர்.

சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஈழப் பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இன அழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொன்று முடித்து, அந்த இழப்புக்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக் கொண்டிருக்கையில், வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச் சம்பவம் ஏற்றுக் கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது.

சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடும் மாதமான தை மாதத்தில் ராஜபக்சே அரசு தமிழர்களுக்குப் பொங்கல் பரிசாக இந்த இடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களை அச்சுறுத்தி அம்மண்ணில் இருந்த ஒற்றை நினைவிடத்தையும் அழித்து முடித்ததோ, ஒருநாள் அதே மண்ணைத் தமிழர்கள் நாங்கள் ஆளுகை செய்வோம். எங்கள் தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வோம். அன்றைக்கு எங்களது வெற்றிச்சின்னத்தை இதே யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்புவோம். எங்கள் நாடும், எங்கள் மண்ணும் கைவரப்பெறும் நாள் வரை ஓயோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூண் இரவோடு இரவாக சிங்கள அரசால் தகர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவுத்தூண் அமைப்பதைக் கூட அனுமதிக்காக ஆட்சியில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும்? என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈழத்தமிழர் விவகாரத்தை கைகழுவி விடாமல் , அவர்களுக்கு வாழ்வுரிமையை வென்றெடுத்துக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sri lanka mullivaikkal victims war memorial demolished in jaffna university leaders condemns

Next Story
செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மீது மோசடி புகார் : ஆளுநர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com