திருபுவனை அடுத்த இலங்கை அகதிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (27). கடந்த 12.6.2019ல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற போது திருபுவனை அருகே கார் மோதி படுகாயமடைந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விபத்தினால் அவரது நரம்பு பாதிக்கப்பட்டு 2 பாதங்களும் முழுமையாக செயல்பட முடியாமல் போனது.
மனுதாரருக்கு ரூ. 30 லட்சத்து 53 ஆயிரம் இழப்பீடு தர கார் காப்பீடு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி சிவக்குமார் கடந்த 2021 செப்டம்பரில் உத்தரவிட்டார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதையடுத்து கூடுதல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் சார்பு நீதிபதி முத்துமுருகன் கடந்த 12.4.23ல் காப்பீட்டு நிறுவன சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜீவரத்தினம், அவரது வழக்கறிஞர் அய்யப்பன், கோர்ட்டு அமீனா வெங்கட் 45 அடி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இன்று வந்தனர். அங்கு ஒருவாரம் அவகாசம் கேட்டனர்.
நீதிமன்ற உத்தரவு என்பதால் அவ்வாறு அவகாசம் தர இயலாது என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜப்தி செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் அங்கிருந்து வெளியேறிய அமீனா வெங்கட் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil