Advertisment

‘நானும் உங்களில் ஒருவன்தான்’ - சென்டிமென்டை சிதறவிட்ட ஆ.ராசா; இந்திய அரசின் மீது அதிருப்தியில் மலையக மக்கள்

கோவையில் மலையக தமிழர்கள் தாயகம் திரும்பிய வரலாற்றின் 200 வது ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட பன்னாட்டு மாநாடு; அரசியல் கட்சிகள், மலையக தமிழர்கள் ஆதரவாளர்கள் பங்கேற்பு

author-image
WebDesk
New Update
Kovai tamil conference

கோவையில் மலையக தமிழர்கள் தாயகம் திரும்பிய வரலாற்றின் 200 வது ஆண்டை ஒட்டி நடத்தப்பட்ட பன்னாட்டு மாநாடு; அரசியல் கட்சிகள், மலையக தமிழர்கள் ஆதரவாளர்கள் பங்கேற்பு

இலங்கை தமிழர் விவகாரம் என்றாலே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழ்ந்த பூர்வீக இலங்கை தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடிய விவகாரம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. 1823 இல் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல லட்சம் பேர் பிரிட்டிஷ் அரசால் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மலையக பகுதிகளுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக, அடிமைகளாக அழைத்து செல்லப்பட்டு அங்கே தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டு, பிரிட்டிஷார் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு போகும் போது அந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் விட்டுச் செல்லப்பட்டார்கள் என்கிற கொடுமையான வரலாற்றின் 200 வது ஆண்டை ஒட்டி பன்னாட்டு மாநாட்டை மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் கோவையில் நடத்தியது.

Advertisment

   மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.சி.கந்தையா தனது கடும் முயற்சியால் தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து பல அமர்வுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

   200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட இந்திய மக்கள் இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும், இந்தியாவில் தாயகம் திரும்பியோராகவும், தமிழ்நாட்டில் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அகதிகளாகவும் சிதறிப்போய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

  நிகர் கலைக்குழுவின் எழுச்சிப்பறை இசையுடன் இம்மாநாடு தொடங்கியது. இரு நூறாண்டுகால துயரத்தைப் படம்பிடிக்கும் வகையில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

  இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி தொடக்கவுரை ஆற்றினார். அதில் அகதிகள் குடியுரிமை தொடர்பாக ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் மற்றும் அவர்களின் விவரங்கள், சேகரிக்கப்படும் தரவுகள், இதுகுறித்து விசாரித்து முதலமைச்சர் வசம் தரப்பட்டுள்ள அறிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.

   தாயகம் திரும்பியோர் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.,வின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா சிறப்புரை ஆற்றினார். "எங்க அம்மா, அப்பா எல்லாம் இலங்கையின் தோட்டப்பகுதிகளுக்கு வேலைக்காக போய்விட்டு திரும்பி வந்தவர்கள்தான். என் அண்ணன்கள் எல்லோரும் அங்கு பிறந்தவர்கள்தான். அவர்கள் இந்தியா திரும்பிய பிறகு பிறந்தவன் நான். எனவே, எனக்கும் உங்களுக்கும் நெருக்கமான உறவு, பந்தம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உங்களுக்கான உரிமைகளை பெற்று தருவதில் உங்களின் வலிகளை புரிந்து கொள்வதில் எனக்கு எந்த சிரமமோ தயக்கமோ குழப்பமோ இல்லை. இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக முக்கியமான 10 பேருடன் மாதந்தோறும் சந்தித்து தொடர்ந்து சிந்தித்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று பேசியபோது பலத்த கைதட்டல் எழுந்தது.

   இவ்வமர்வில், 'பிரிட்டிஷ் அரசின் தேயிலைத் தேவைகளுக்காக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் இலங்கையில் மலையக தமிழர்களாகவும் இந்தியாவில் தாயகம் திரும்பியவராகவும் தமிழ்நாட்டில் அகதிகளாகவும் சிதறி கிடக்கின்றனர். இதற்கு இலங்கை, இந்திய, ஆங்கிலேய அரசுகள் பதில் சொல்ல வேண்டும், நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் முகாம்களுக்கு வெளியேயும் உள்ளேயும் வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றிய ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், சிறிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை கருத்தில் கொண்டு, இந்திய குடியுரிமை கோரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் அரசு தேயிலை தோட்டக்கழகத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

   தாயகம் திரும்பிய, விவசாயத்தை மேற்கொண்டுள்ளவர்களுக்கு நிலமும் வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும், மலையகத் தமிழர்களை தனித்த சமூகம் என்று இலங்கை அரசு சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும். மலையகத் தமிழர்கள் யார் என்பதை தெளிவாக இலங்கை அரசு வரையறுக்க வேண்டும்,

இலங்கையின் மலையகத்தில் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு நில உரிமையும் வீட்டு உரிமையும் வழங்க இலங்கை அரசு முன்வர வேண்டும், இலங்கையில் மிகவும் பின்தங்கியுள்ள மலையக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு இலங்கை, இந்திய, ஆங்கிலேய அரசுகள் முன் வர வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   இலங்கையில் இருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் சிவராஜேந்திரன் "மலையக மக்களின் வரலாறு என்பது கண்ணீர் வரலாறு மட்டுமல்ல, அது ஒரு போராட்டத்தின் வரலாறு. அது இந்தியாவில் தொடங்கி இலங்கையின் மலையகத்தில் போய் நின்றிருக்கிறது. மலையகம் 200 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து தமிழர்கள் போய் சேர்ந்த மாத்தளை வரை ஒரு நடை பயண நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் மலையகத் தமிழர்களின் நியாயங்களை உணர்ந்த சிங்களவர்களும் கலந்து கொண்டார்கள்" என்று சொல்லி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

   அடுத்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு பேசும்போது, "சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாததால் இலங்கையில் இருந்து வந்து தஞ்சம் கோரும் அகதிகளுக்கு எந்தவித சட்ட உரிமையோ மற்ற உரிமைகளோ தரவேண்டிய அவசியத்தில் இந்தியா இல்லை. இன்று பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து போராடும் மக்கள் 'எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேற மாட்டோம். இது எங்களுக்கு உரிய நாடு' என்று சொல்கிறார்கள். இதையே 1964 இல் மலையக மக்களும் சொல்லி இருந்தால் இன்று இத்தகைய பிரச்சனைகள் எழுந்திருக்காது. நாடற்றவர்கள் என்கிற நிலையே உலக விழுமியத்திற்கு எதிராக இருக்கிறது" என்றார்.

   இலங்கையின் முன்னாள் எம்.பி மல்லியப்பூ சந்தி திலகராஜ் பேசும்போது, "இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் மக்களின் பிரச்சினை உலக அளவில் கவனம் பெற்று விட்டது. ஆனால் மலையகத் தமிழர்கள் - இந்தியாவிலிருந்து போன இந்தியர்களின் பிரச்சினை குறித்து பேசும்போது இந்திய ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாதது வருத்தத்திற்குரியது. அதனால்தான் இந்த மக்களின் பிரச்சினை 200 வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களுக்கு இந்த மக்கள் தங்கள் உரிமையை பெறுவதில் பங்காற்றும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது.

இலங்கையின் முன்னாள் எம்.பி மல்லியப்பூ சந்தி திலகராஜ்

   இலங்கையில் இரண்டு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று, ஆயுதப் போராட்டம்; இன்னொன்று, அகிம்சை போராட்டம். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள்; அகிம்சை போராட்டத்தில் நின்று போராடியவர்கள் இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்" என்றார்.

   கூடலூர் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அ.தி.மு.க.,வின் பொன். ஜெயசீலன் பேசும்போது, "இந்த மக்கள் குடியுரிமை பெறுவதற்கான தனி தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம்" என்று சொல்லிவிட்டு போனார்.

   இலங்கையின் உள்நாட்டு உரிமை கோரும் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் இந்த மலையக மக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பது குறித்து இந்திய அரசின் மீதும், இலங்கை அரசு மீதும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிருப்தி கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சிலிருந்து வெளிப்பட்டது என்பதும், இலங்கைத் தமிழர் விவகாரம் என்றாலே நரம்பு புடைக்க பேசும் வைகோவின் ம.தி.மு.க.,வினர் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை என்பதும் பலரது புருவங்களை உயர வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment