இலங்கை அரசுக்கு எதிராக கொழும்புவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இலங்கையில் வன்முறை வெடித்தது. கொழும்பு அருகே நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் காரணம் என்று கருதும் இலங்கை மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு எதிரே, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, இலங்கையில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் ராஜபக்ச ஆதரவாளர்கள் பயணம் செய்த பேருந்து, கார் ஆகியவற்றை ஏரியில் தூக்கி வீசி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். வன்முறையைக் கட்டுப்படுத்த இலங்கை போலீஸ் நடவடிக்க மேற்கொண்டது. இதுவரை இதில் 130 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் வன்முறை வெடித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில், இலங்கை அதிபர் இல்லம் அருகே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறையினருடன் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொழும்புவுக்கு வெளியே, நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்களை நோக்கி, அமரகீர்த்தி அதுகோரலா இலங்கை எம்.பி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் போராட்டக்காரர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீது இலங்கை ஆளும் கட்சி எம்.பி துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்த மக்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அமரகீர்த்தி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், ராஜபக்சவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கொழும்பில் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடுதவதைத் தடுக்கும் வகையிலும், அமைதியை ஏற்படுத்தவும் ராணுவ தளபதி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்து வருகின்றனர்.
கொழும்பு அருகே நிட்டம்புவு பகுதியில் ராஜபக்ச ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை விரட்ட காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால், இலங்கையின் முக்கிய நகரங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.