தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு 1980களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக சென்றவர்களில் பலர் 1983இல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் விளிம்பில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கட்டிய துணியுடன் தாம் சம்பாதித்த அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டு ஈழத்தமிழ் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு வந்த கடைசி கப்பலில் வந்த ஒரு தம்பதியர் தான் கண்ணன் – சாந்தி தம்பதியர். இவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.
அந்த முகாமிலேயே அவர்களுக்கு 21.04.1986ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு அவர்கள் நளினி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
நளினியின் தாய் சாந்தியின் தாத்தா இராமநாதபுரம் திருவாடனை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் நாட்டின் சுதந்திரத்திற்காக கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்.
அதன்பிறகு பிழைப்பு தேடி இலங்கையில் குடியேறியவர்கள் தான் சாந்தி-கண்ணன் தம்பதியினர். இந்தத் தம்பதியினர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்த பின் 1986 ஏப்ரல் மாதம் பிறந்தவர் தான் நளினி.
1997ஆம் ஆண்டு தமிழக அரசு மண்டபம் முகாமில் இருந்த இலங்கை தமிழர்களை தமிழகத்தின் பல்வேறு முகாம்களுக்கு பிரித்து அனுப்பியது. அதில் நளினி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அப்போதைய விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
நளினி 10ஆம் வகுப்பு வரை சின்னசேலம் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பல்வேறு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார்.
-
நளினி
இந்தச் சூழலில் நளினிக்கு கடந்த 2013இல் திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் கிருபாகரன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் கிருபாகரன் என்பவரை திருமணம் முடித்த நளினிக்குத் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
36-வயதாகும் நளினி தமது சொந்த மண்ணில் எவ்வளவோ முயன்றும் தனியாக நிற்க முடியாத நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் குடும்பத்துக்கு நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கடந்த 08.04.2021 அன்று கடவுச்சீட்டுக்கோரி (பாஸ்போர்ட்டுக்கு) விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தற்போதும் வசித்து வரும் நளினி தாம் இந்தியன் என்ற தம் அடையாளத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்தபோது பலகட்ட நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றார்.
இது குறித்து அவரை நாம் சந்தித்தபோது; எனது கடந்த காலம், நான் பட்ட இன்னல்கள் எல்லாம் சொல்லி மாளாதுங்க. எனது அம்மா-அப்பா இராமநாதபுரம் மண்டபம் கேம்ப்லதான் இருந்தாங்க.
நான் பிறந்தது 1986இல் மண்டபம் கேம்ப்ல உள்ள ஆஸ்பிட்டலில் தான் பொறந்தேன். எனது தாத்தா மற்றும் உறவுக்காரங்க எல்லாம் இராமநாதபுரம் தாங்க. அதனால எங்க அம்மா-அப்பாவுக்கு 1985-ல ராமநாதபுரம் கோயில்லதான் கல்யாணம் நடந்துச்சுங்க.
எங்க அப்பாவோட சொந்த ஊரு ராமநாதபுரம் தான். ஆனா அவங்க கேம்லதான் இருந்தாங்க. 1996-ல மண்டபம் கேம்ப்ல இருந்தவங்கள 108 முகாம்க்கு அங்கிருந்து பிரிச்சி அனுப்பிச்சாங்க. அப்ப நானும் அம்மா-அப்பாவும் சின்ன சேலத்துல உள்ள கேம்ப்க்கு இடம்பெயர்த்தப்பட்டோம்.
-
வழக்குரைஞருடன் நளினி
அம்மா-அப்பா சின்ன சேலத்துலதான் இருக்காங்க. இப்படியொரு நிலையிலதான் நான் திருச்சி கேம்ப்ல உள்ள கிருபாகரனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
கொட்டப்பட்டு கேம்பில் குடியுரிமைக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று சக நண்பர்கள்ட்ட பேசிட்டிருந்தப்போ இந்த கேம்ப்ல உள்ள மாதவி எனக்கு ரொம்பவும் ஹெல்ப் பண்ணாங்க.
அவங்க அட்வகேட் ஒருவர் மூலம் நாம குடியுரிமை பெற முயற்சிக்கலாம்ன்னு அவங்க நண்பரான அட்வகேட் ரோமியோ ராய் என்பவர அறிமுகம் செஞ்சாங்க.
அவருட்ட பேசினப்பதான் உங்களுக்கு ஒரு வழி இருக்கு நீங்க பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிங்க அதன் மூலம் ஒரு வழி பிறக்கலாம்ன்னு தெம்பு கொடுத்தாரு.
அதன்படி, நான் 12-ம் வகுப்பு வர படிச்சாலும், 10-வது முடித்த சர்ட்டிபிகேட்தான் இருக்கு. அதனால நான் மண்டபம் கேம்ப்ல பொறந்ததற்கான பர்த் சர்ட்டிபிகேட், 10-ம் வகுப்பு படிப்பு சான்றிதழ், நான் இப்போ கொட்டப்பட்டு முகாம்ல இருக்க தகவல்களோடு கடவுச்சீட்டு கேட்டு பாஸ்போர்ட் ஆபீஸ்ல 2021-ல் மனு கொடுத்தேன்.
போலீஸ் விசாரணைல நீங்க இலங்கை மறுவாழ்வு கேம்ப்ல இருந்துட்டு எப்படி பாஸ்போர்ட் கேப்பீங்கன்னு திருப்பி அனுப்பினாங்க, இங்க வந்த போலீஸும் அதத்தான் சொன்னாங்க. அயராது மீண்டும் மனு போட்டேன்.
அப்போ, உங்க நாட்டுரிமையில் சந்தேகம் எழுந்தாகக் கூறி நேரில் வந்து பார்க்கும்படி, பார்ஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அதிர்ந்து போன நான் கடந்த 21.07.2021 அன்று பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று நான் இந்தியாவில் பிறந்ததற்கான எல்லா ஆதாரங்களையும் காண்பித்தேன்.
அப்பவும் முடியாதுன்னப்பதான் அட்வகேட் மூலம் பிறப்பின் அடிப்படையில் எனக்கு கடவுச்சீட்டு கொடுக்கனும்ன்னு கேட்டு நீதிமன்றத்துக்கு போனேன்.
அட்வகேட் இந்திய குடியுரிமைச் சட்டம், 1955-ன் மூன்றாம் பிரிவில், 26.01.1950 அன்று முதல் 01.07.1987 முன்பு வரை இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி எழுத்துபூர்வ ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இதனடிப்படையில் 12.08.2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அய்யா, மேற்குறிப்பிட்ட சட்டங்களைச் சுட்டிக்காட்டி, “மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அவர் இந்தியக் குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து எனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இப்போ எனக்கு கடவுச்சீட்டு வந்துடுச்சு என்றார் மகிழ்வுடன்.
மேலும், அவர் தெரிவிக்கையில், இந்திய மக்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அத்துனை உரிமைகளும் எனக்கும் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். கடவுச்சீட்டுக்கு உதவிய என்னோட அட்வகேட்டுக்கும், கடவுச்சீட்டு கொடுக்க உத்தரவு பிறப்பித்த நீதியரசர்க்கும், கடவுச்சீட்டு கொடுத்த மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறைக்கும் நான் நன்றி சொல்ல இந்த நேரத்துல கடமைப்பட்டிருக்கேன்.
எனக்கான அடையாளம் இல்லையே என்ற வருத்தம் இருந்திருக்கு, இப்போ அந்த அடையாளம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. என்னைப்போல் தமிழகம் முழவதும் பல்வேறு கேம்ப்ல ஆயிரக்கணக்கானோர் இருக்காங்க. எனக்கு வந்த இந்த தீர்ப்பு, பிறரும் கடவுச்சீட்டு எடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றார் புன்சிரிப்புடன்.
நளினியின் வழக்கறிஞர் ரோமியோ ராய் நம்மிடம் பேசியதாவது; தமிழகம் முழுவதும் 108 இலங்கை மறுவாழ்வு முகாம்கள் இருக்கு. இங்க சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வசித்திட்டிருக்காங்க.
அவங்களுக்கு அரசு இன்றுவரை நிறைய செய்திட்டிருக்கு. ஆனா, அவங்கள இந்தியரா அடையாளப்படுத்தல இதுவரை. இதனால் அவர்கள் வேலைவாய்ப்பு இழப்பு, தமக்கான தனித்துவமின்மை என பல்வேறு இடர்பாடுகளை தொடர்ந்து அனுபவிச்சிட்டிருக்காங்க.
இந்த 108 கேம்ப்ல 60 ஆயிரம் மக்களும், இந்த கேம்ப் இல்லாம வெளியே சுமார் 34 ஆயிரம் மக்களும் என 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டில் இருக்காங்க. இவங்க யாரும் இந்தியர் அல்லாதவர்களாகவே கடந்த 40 ஆண்டுகளாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது வேதனை.
5 வருடம் தமிழகத்தில் வசித்திருந்தாலே அவர்களுக்கு ஓட்டுரிமை உள்பட அடிப்படை உரிமைகளை கொடுக்கலாம்ன்னு சட்டம் சொல்லுது. ஆனா இதெல்லாம் எதையுமே கருத்தில் கொள்ளாம சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கானோர் இங்க வசிக்கிறாங்க.
இந்த கேம்ப்ல வந்து இருந்தவங்க மூலமா சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் பிறந்தவர்களுக்கு பிறப்புரிமையின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்போர்க்கும் ஆதார் கார்டு இருக்கு என்றாலும் அது இந்தியக் குடியுரிமையாகாது. அடிப்படையான வாக்குரிமை, பாஸ்போர்ட் அவர்களுக்கு கிட்டும் பட்சத்தில் தான் அவர்களும் இந்தியர்களாக அரசாங்கத்தால் கருதப்படுவர்.
நளினி வழக்கை பொறுத்தவரை, இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-ன் மூன்றாம் பிரிவில், 26.01.1950 அன்று முதல் 01.07.1987 முன்பு வரை இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி நீதிமன்றம் மூலம் அவருக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது
இந்த வழக்கை இனி மேற்கோள் காட்டி இலங்கை மறுவாழ்வு முகாமில் 1987-க்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்கள் தங்களுக்கான நிவர்த்தியை தேடிக்கொள்ளலாம். இதேபோல் தற்போது மத்திய சிறை இலங்கை சிறப்பு முகாமில் பாஸ்போர்ட் வழக்கில் இருக்கும் சிலருக்கும் நீதி கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார்.
வெகு நீண்ட பெரும் சட்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதன் முதலாக இலங்கை மறுவாழ்வு முகாமில் இருக்கும் ஒருவர்க்கு பாஸ்ப்போர்ட் கிடைத்தது என்பது இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலுசேர்க்கும்.
செய்தியாளர்
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil