எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றி வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, ஜனவரி 31 ஆம் தேதி நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக்கொண்டிருக்கையில், இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
அதேபோல், மற்றொரு படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலை சேர்ந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இரண்டு சம்பவங்களில் மீனவர்களின் படகுகளையும் சிறைப்பிடித்தது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டுள்ள இலங்கை கடற்படை, இரண்டு விசைப்படகுகளில் 21 இந்திய மீனவர்கள், ஜனவரி 31 அன்று இரவு கோவிலான்,ஜப்னா, பாயிண்ட் பேட்ரோ கலங்கரை விளக்கம் பகுதிகளில் அத்துமீறி மீன் பிடித்துகொண்டிருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாத குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 105 படகுகளை ஏலம்விடப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மீனவர்களை கைது செய்வது, படைகுகளை சிறைப்பிடிப்பது போன்ற சம்பவங்களில் இலங்கை ஈடுபடுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil