Advertisment

நாகை மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல்; ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை விட்டு மோதி படகை கவிழ்த்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Sn atta

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9-ம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகின் மீது கடற்படை கப்பலைக் கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. 

Advertisment

கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஃபைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கடலில் காயங்களுடன் வலைகளில் சிக்கி மீனவர்கள் தத்தளித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து மீனவர்களை தங்களது கப்பலில் ஏற்றிய இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் செய்யாமல் சுமார் 6 மணி நேரமாக அவர்களை மிரட்டி விசாரணை நடத்தியுள்ளனர்.
   
அப்போது, தங்கள் எல்லைக்குள் தான் மீன்பிடித்தோம் என தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு வந்த சக தமிழக மீனவர்களிடம் செருதூர் மீனவர்களை ஒப்படைத்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்களின் உதவியோடு நடுக்கடலில் கவிழ்ந்த தங்களது படகை மீட்ட நாகை மீனவர்கள் காயங்களுடன் இன்று (புதன்கிழமை) காலை கரை திரும்பியுள்ளனர்.

WhatsApp Image 2024-09-11 at 15.44.12

   
இலங்கை கடற்படை அதிகாரிகள் கப்பலை கொண்டு மோதியதில், படகில் இருந்த வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், மீன் பிடி தளவாட பொருட்கள் என ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் விழுந்து மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, செருதூர் மீன் இறங்குதளம் வந்து சேர்ந்த காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும், இலங்கை கடற்படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment