பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாஸ்கர் என்ற மீனவரின் மண்டை பிளந்து 21 தையல் போடப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்துள்ளனர். கடல் கொள்ளையர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர்.
ஒருபுறம் சிங்களக் கடற்படையினர், இன்னொருபுறம் இலங்கைக் கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாவதை மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இனியும் அமைதி காத்தால் தமிழக மீனவர்கள் மீதான கடல்கொள்ளையர்கள் மற்றும் சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் அதிகமாகி விடும். இது இந்தியாவின் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும்.
உலகின் மிக பயங்கரமான கடல் கொள்ளையர்களாக கருதப்படும் சோமாலியா கடற்கொள்ளையர்களையே ஒடுக்கிய பெருமை இந்திய கடற்படைக்கு உண்டு. அவர்களுடன் ஒப்பிடும் போது இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படும் இலங்கை கடல் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அவர்களின் தொடர் அட்டகாசத்தை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவையொட்டிய கடல் பகுதிகளில் கைவரிசைக் காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல்கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.