அடையாள அட்டையும் வழங்காமல் சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் தமிழக அரசு அலைக்கழிப்பதாக கூறி, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழ் அகதியால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை தமிழ் அகதி ஜோய். இலங்கை மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக படகில் வந்து அத்துமீறி நுழைந்ததாக சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், ஜோய் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். எனக்கு அகதிகளுக்கான முறையான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதனால், அகதிகளுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறேன். என்னுடைய பெற்றோர் இருக்கும் இலங்கைக்கு என்னை அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு அடையாள அட்டையும் வழங்கவில்லை. சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஜோய் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவல் துறையினர் சமாதானம் செய்து வைத்த போதும் சமாதானம் ஆகாமல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனக்கு அடையாள அட்டை வழங்காமல் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“