/indian-express-tamil/media/media_files/2025/09/04/srilankan-refugee-2025-09-04-19-19-43.jpg)
Sri Lankan Tamils refugees
இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக, தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். ஆண்டுகளாக தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு தற்போது அவர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின்படி, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசு கணக்கில் அகதிகளாகப் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த பல ஆண்டுகளாக சட்ட அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Foreigners Act, 1946) கீழ் உள்ள கடுமையான தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளிக்கிறது. குறிப்பாக, இச்சட்டத்தின் பிரிவு 14A, ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை விதிக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பின் மூலம், மேற்கூறிய தேதியிலிருந்து அகதிகளாகப் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்கள் இந்த சட்ட விதிகளில் இருந்து முழுமையாக விலக்கு பெறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், அடிப்படை வசதிகள் இருந்தபோதிலும், சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற சமூக உரிமைகளை பெறுவதில் பல தடைகளை சந்தித்து வந்தனர். தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு, அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு வாழ்வுரிமையை வழங்குவதோடு, அவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.