Sridhar Vembu wants Govts should avoid lockdowns: ஊரடங்குகள் தொழில்களையும் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கின்றன. எனவே ஊரடங்குகளை தவிர்க்க அரசுகள் முன்வர வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால், அப்போதிலிருந்து இப்போது வரை தொடர்ச்சியான ஊரடங்குகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கின் பயனாக தொற்று பாதிப்பு குறைவதாக கூறப்பட்டாலும், கடந்த 2 ஆண்டுகளாக தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில் செய்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பொருளாரதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ZOHO குழும தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, ஊரடங்கை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த அவரது தொடர்ச்சியான ட்வீட்களில், மார்ச் 2020 தொடக்கத்தில், எங்கள் ஊழியர்களை அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பி வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட கிராமப்புற அலுவலகங்களையும் தொடங்கியுள்ளோம்.
இதைச் சொல்லிவிட்டு, நமது மத்திய மற்றும் மாநில அரசுகள் லாக் டவுனைத் தவிர்க்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அவர்கள் நம் ஏழைக் குடிமக்களை அதிகம் காயப்படுத்துகிறார்கள்.
நம் மக்கள்தொகையில் ஒப்பீட்டளவில் சிறிய சதவீதத்தினர் மட்டுமே வழக்கமான சம்பளம் வரும் வேலைகளைக் கொண்டுள்ளனர் (அது ட்விட்டர் பார்வையாளர்கள் அனைவரும்!). நமது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் தினசரி வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் நாங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உணவை வழங்கியுள்ளோம், எனவே இந்த யதார்த்தத்தை நாங்கள் காண்கிறோம்.
மென்பொருள் துறையில் இருக்கும் பாக்கியம் எங்களுக்கு இருப்பதால், வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும், உற்பத்தி நிறுவனங்களால் முடியாது. ஊரடங்குகள் அந்தத் தொழில்களையும் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதித்தன.
கிராமப்புறக் குழந்தைகள் ஏறக்குறைய 2 வருடங்களாக எந்தப் பள்ளியையும் பார்க்கவில்லை, மேலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு அவர்களிடம் கணினிகள் அல்லது இணைய வசதி இல்லை.
ஏராளமான தினசரி ஊதியம் பெறுவோர், உற்பத்தித் தொழில் மற்றும் அதன் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள், குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகள் ஆகியோரின் உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு, நமது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்குகளைத் தவிர்க்கும் என நம்புகிறேன். இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil