இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு நூதன முறையில் தங்கம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 8.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைமன்னார் உருமலையில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தலைமன்னார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான நிலையில் நின்றிருந்த இருவரை சோதனை செய்தனர். சோதனையின் போது, மீன்பிடி வலை மூழ்குவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருளைகள்போல வடிவமைக்கப்பட்ட 26 தங்க உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மேல் அலுமினிய முலாம் பூசப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 8.8 கிலோகிராம் ஆகும். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.8.62 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் முயற்சிக்கு பின்னால் இருக்கும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த குழுக்களைப் பற்றிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.