நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கை தமிழர் பிரச்னைகளைக் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு. எனவே தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என சீமான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
2008 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் தொடங்கிய காலகட்டத்தில் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்ட போது, சீமான் அதற்கெதிராக தீவிரமாகப் பேசத் தொடங்கினார்.
இந்த நேரத்தில்தான் 2009 ஆம் ஆண்டு, நாம் தமிழர் இயக்கத்தை சீமான் தொடங்கினார். அடுத்த ஆண்டே மே மாதம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது. தமிழ்நாட்டில் எந்த இனத்தவரும் வாழலாம். ஆனால் ஆள்கின்ற உரிமை எங்களுக்கு மட்டுமே' என்ற கருத்தை முன்வைத்தார். அதற்கு பலமட்டங்களில் இருந்து விமர்சனம் கிளம்பியது. தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இயற்கை வேளாண்மை என சீமானின் பேச்சுக்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததால் பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினர்.
அதன்பின்னர் தனது அரசியல் கட்சியை மேலும் வலுவாக்க, `சுற்றுச்சூழல் பாசறை' என்ற அமைப்பை முதலில் தொடங்கினார். இதன்மூலம் மரம் நடுதல், கண்மாய் தூர்வாருதல், பனைவிதை சேகரித்தல் எனச் சூழல் பணிகளையும் நாம் தமிழர் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படி இருக்க ஒரு பிரச்சாரத்தின் போது சீமான், பிரபாகரனுடன் உடன் சந்திப்பு பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார், ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார், என்றெல்லாம் அவர் பேசியது அவரை கேலிப்பொருளாக்கின.
மேலும் இதை மறுக்கும் வகையில், சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டு நிமிடங்கள்தான் என மதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
ஆனால் சீமான் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில், வன்னி மாவட்ட தொகுதியின் எம்பி, திலீபன் பேசும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இந்தியாவிலுள்ள சீமான் போல, ஆமைக்கறி, பூனைக்கறி, டிகே 47 என்று எனது தமிழினத்தை வைத்து, எனது தமிழினத்தின் துன்பங்களை வைத்து பிழைப்பு நடத்தக்கூடிய சீமான் போல என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக மாநில செய்தித்தொடர்பு இணைச் செயலாளார் ராஜீவ் காந்தி, “விளைந்த நெல் வயலுக்குள் மாட்டை இறக்கி நாசமாக்கும் வேலையை சீமான் செய்கிறார்! ஈழ பகுதியின் மக்கள் பிரதிநிதி இலங்கை பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு!!” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil