ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் மெகா தங்கும் விடுதி திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு பற்றிக் கூறாமல் முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக சிப்காட் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் இணைந்து மெகா தங்கும் விடுதி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூரில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.706.50 கோடி செலவில் 18,720 படுக்கைகள் கொண்டு கட்டப்பட்ட தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.17-ம் தேதி திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம்- வடகால் கிராமத்தில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத்தின் கீழ் குறைந்த விலையில் தங்கும் விடுதி அமைக்கும் ARHCs) திட்டம், ஜூலை 2020-ல் தொடங்கப்பட்டது மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையில் இந்த திட்டம் 2021 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் அனுமதிக்கப்பட்ட 5 திட்டங்களில் ஒன்று.
வல்லம்- வடக்கல் பகுதியில் ரூ.707 கோடி செலவில் கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு மத்திய அரசு மானியமாக ரூ.37.44 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.498 கோடி கடனுதவியும் வழங்கியுள்ளது. இது ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும், அறிந்திருப்பார். ஆனால் அவர் வேண்டுமென்றே தமிழக மக்களிடம் இதுபற்றி குறிப்பிடாமல் புறக்கணித்துவிட்டார்” என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.