க.சண்முகவடிவேல்.
சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டதாக, ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி உட்பட 12 பேருக்கு சொந்தமான கல் குவாரிகளுக்கு, 44.65 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில், தற்போது பட்டா நிலங்களில், 76 சாதாரண கல் குவாரிகள், அரசு புறம்போக்கு நிலங்களில், மூன்று கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 12 குவாரிகள், முறையான அனுமதி பெற்றும், தற்போது இயங்கவில்லை. குத்தகையில் உள்ள 42 கல் குவாரிகளில் விதிமீறல் நடந்துள்ளதா என தாசில்தார், கோட்ட அதிகாரிகள், நில அளவை துறை உதவி இயக்குனர் உட்பட பல அதிகாரிகள் தலைமையிலான குழு, ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், 12 கல் குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குவாரிகளை கையாளும் 12 பேருக்கும், 44.65 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
அபராதம் விதிக்கப்பட்ட, 12 கல் குவாரிகளில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியும் ஒன்று. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் பகுதியில் உள்ள, அவரது குவாரிக்கு மட்டும், 23.54 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
'கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல், சுற்றுச்சூழல் விதிகளை மீறி ஏராளமான கல் குவாரிகள் செயல்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னையை சேர்ந்த சுஷ்மிதா என்பவர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், கல் குவாரிகளை நேரில் ஆய்வு செய்து, விதிகளை மீறிய குவாரிகள் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், கனிம வளத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு, கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு, முதல் கட்டமாக, 12 குவாரிகளுக்கு 44.65 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில், அமைச்சர் நேரு இருப்பதாக குற்றம்சாட்டி, பழனியாண்டி பேசியதாக, 'ஆடியோ' வெளியான நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள பழனியாண்டி இதுகுறித்து தெரிவிக்கையில்; கரூர் மாவட்ட நிர்வாகம் ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ளது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது குவாரியில் கூடுதலாக 20 அடிக்கு தோண்டியது உண்மை தான் என்றும் ஆனால் ஏன் அப்படி தோண்டினேன் என்பதற்கு விளக்கத்தையும் கொடுத்துள்ளேன்.
கடந்த 2013ஆம் ஆண்டு கல்குவாரிக்காக ஐந்தரை ஏக்கரை தாம் லீசுக்கு எடுத்ததாகவும் அதில் 3 ஏக்கரில் கற்கள் இல்லை எனவும் இருக்கின்ற 2 ஏக்கரில் மட்டுமே கற்கள் வெட்டி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 3 ஏக்கரில் கற்கள் வெட்டி எடுக்க முடியாததால் கற்கள் உள்ள 2 ஏக்கரில் கூடுதலாக 20 அடிக்கு தோண்டினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்காக ரூ.23 கோடி அபராதம் விதிப்பதா என கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிரான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது கல் குவாரிக்கு யார் வேண்டுமானாலும் வந்து அளந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் எக்ஸ்ட்ரா 20 அடிக்கு 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் போடலாம் என்றும் 23 கோடி ரூபாய் என்பது ரொம்ப ஓவர். இதற்கு பின்னால் யார் யார் இருக்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும் என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவின் குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:-
கட்சியினரையும், என்னை சுற்றி இருப்பவர்களையும் வளர்த்து விட்டு தான் எனக்கு பழக்கமே தவிர, யாரையும் அழிக்க நினைத்ததில்லை. எம்.எல்.ஏ பழனியாண்டியின் குவாரியில் தவறு நடந்திருப்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஸ்ரீரங்கம் தொகுதியில் அவர் போட்டியிட தலைமையிடம் பேசி நான் தான் சீட் வாங்கிக் கொடுத்து, பிரச்சாரம் செய்து, வெற்றி பெறவைத்து, இவ்வளவு பெரிய பதவியும், அந்தஸ்தும் உருவாக்கிக் கொடுத்துள்ளேன். அவரை வளர்த்து விட்ட நானே எப்படி அழிக்க நினைப்பேன். அவர் தவறு செய்யாவிட்டால் அதிகாரிகளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? அதை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே? எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சி திமுகவை சேர்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் இப்போது நேருக்கு நேர் கருத்து மோதல்களில் ஈடுபட்டிருப்பது திருச்சி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.