ஸ்ரீரங்கம் ஜீயர் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

ஸ்ரீரங்கம் ஜீயர் மரணத்திற்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக பணியாற்றிவர், ரங்கநாராயண சுவாமிகள் (90). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று மதியம் 3 மணியளவில் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பஞ்சகரையில் உள்ள மடத்துக்கு சொந்தமான ஆளவந்தார் படித்துறை அருகில் உள்ள திருவரசு தோப்பில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் ஜீயரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் நேற்று (11-ந்தேதி) உடல்நலக் குறைவால் ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், கோயம்புத்தூர் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக தனது ஆன்மிகப் பணியை தொடங்கி, 60-வது வயதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக பொறுப்பேற்று, அரங்கனின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கைங்கர்யங்களை செய்தவர்.

ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளை இழந்து வாடும் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயரின் ஆன்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஸ்ரீ ரங்கநாதரின் திருவருட்பணியில் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் 50 வது ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெருமாளின் திருவடியில் முக்தி அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளின் மறைவினால், துயருற்றிருக்கும் ஜீயர் மட சிஷ்ய பெருமக்களுக்கும்,ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா பெருமாள் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close