மனிதனை சமூக விலங்கு என்பர். காரணம், மனிதனும் கூடி வாழ்பவன் தான். கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். பண்டைய காலத்தில் கூடி நின்று விவசாயம் செய்தனர்.
இயந்திர கதியிலான நமது இயல்பு வாழ்க்கையில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்படைய வைக்கவே விழாக்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் மூலம், புத்துணர்வும், புது எழுச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், மார்கழி மாதம் நேற்று முடிந்து தை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பதால் தமிழ்நாடு முழுவதும் களைகட்டி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் கரும்புகளை கட்டி, மாவிலைகள்,கூலைப் பூக்களால் அலங்கரித்துள்ளனர்.
வாசல்களில் கோலமிட்டு பூசணிப்பூக்கள் வைத்து வீடே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. சூரியனைப் போற்றும் பொங்கல் என்பதால் பலரும் சூரிய உதயத்திற்கு முன்பே பொங்கல் வைக்கத் தொடங்கி சூரிய உதயத்தின்போது பொங்கல் பொங்குவது போல பொங்கல் வைத்துள்ளனர்.
சூரிய உதயத்தின் போது பொங்கல் வைக்க இயலாத மக்கள், இன்று வரும் நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பொங்கலை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் வயலூர் முருகன், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்களில் காலை முதல் திரளான பக்தர்கள் வழிபாடு செய்து உங்களை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருகோயிலில், இன்று (14.01.2025) காலை நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன், விலைமதிப்பற்ற ஆபரணங்கள் சூடி மகர சங்கராந்தி புறப்பாடு கண்டருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை மனம் உருகி வழிபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
க.சண்முகவடிவேல்