ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்னாராவ், சந்தாராவ் சந்தா மற்றும் கட்டா ராமு ஆகியோர் சாமி தரிசனம் செய்ய திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மூலஸ்தானம் அருகில் உள்ள காயத்ரி மண்டபத்தில் காத்திருந்தனர். அப்போது கோவில் பணியாளர்கள், சில பக்தர்களை குறுக்கு வழியில் அழைத்துச் சென்றதை கண்டித்து அங்குள்ள உண்டியலை வேகமாக தட்டியுள்ளனர். இச்செயலை அடுத்து திருக்கோவில் ஊழியர் விக்னேஷ் என்பவர் உண்டியலை தட்டாதீர்கள் என்று கூறிய நிலையில், மேற்படி சென்னாராவ் மற்றும் சிலர் சேர்ந்து விக்னேஷின் தலைமுடியை பிடித்து இழுத்து உண்டியலில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் தற்காலிக பணியாளர்கள் பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து சென்னாராவை தாக்கியதில் அவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழித்துள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் கோவில் ஊழியர்களை தாக்கியதில் கோவில் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் 20 நிமிடம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோவில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சந்தாராவ் சந்தா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மனு ரசீது எண்.919/23 வழங்கப்பட்டுள்ளது. கோவில் தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆந்திரபிரேதசத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின்பேரில் புகார் மனு ரசீது எண்.920/23 வழங்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/jncVJ76f5kjvUlJ0xy13.jpeg)
மேலும் ஆந்திர பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் வழங்கப்பட்ட மனு (ரசீது எண்.919/23) மீது மேல் விசாரணை மேற்கொண்டு ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்ற எண் : 2992/23 u/s 323, 506(1) IPC-60 ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று மாலை (12.12.2023) வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோயில் தற்காலிக பணியாளர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில ஐயப்ப பக்தரைக் கடுமையான முறையில் தாக்கி ரத்த காயத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்தும், கோயில் தற்காலிக பணியாளர்கள் 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் ஸ்ரீரங்க கோவில் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்து முன்னணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இணை ஆணையர் வரும் வரை வெளியில் செல்ல மாட்டோம் என்று இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
/indian-express-tamil/media/media_files/IAl47j7YauRcGCGKKQqK.jpeg)
பின்னர் ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுரம் முன்பு அமர்ந்து இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பியும், சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர். அதேபோல் பாஜக தலைமையும் கண்டன அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“