ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கிழக்குவாசல் கோபுரத்தில் உள்ள கொடுங்கை ஆக.5-ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லையென்றாலும், இது தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. 17-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் அரசன் அச்சுத தேவராஜன் முழு அளவில் கோபுரத்தை எழுப்ப முயற்சித்தும் முடியவில்லை. அதன்பிறகு வந்த பல அரசர்களும் முயன்றனர் ஆனால் முடியவில்லை.
இந்தநிலையில் தான், அகோபில மடத்தின் 44-வது அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் 1979-ம் ஆண்டில் ராஜகோபுரத் திருப்பணிகளை முன்னின்று தொடங்கி 8 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பின்னர் 236 அடி உயரத்தில் ராஜகோபுரத்தை நிர்மாணித்து தனது 92-வது வயதில் 25.3.1987-ல் குடமுழுக்கு செய்தார்.
இந்த ராஜகோபுர திருப்பணிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சத்தை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் வழங்கி, குடமுழுக்கிலும் பங்கேற்றார். ஆனால், சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர். உயிரிழந்தார்.
இதுபோக ஸ்ரீரங்கம் தொகுதியில் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தான் முதல்வராக இருக்கும் போது பலமுறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த ஜெயலலிதா, 2015-ம் ஆண்டு நடைபெற்ற இக்கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வராக இருந்தும் பங்கேற்க இயலாத நிலையில் இருந்தார்.
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் கட்டப்பட்டால் இலங்கை அழியும் என்ற சொல் வழக்கு இங்கு அக்காலத்திலேயே வழங்கி வந்தது. அதேபோன்று ராஜகோபுரம் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தான் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து பெரும் அழிவு ஏற்பட்டது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இது ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான கடந்த கால வரலாறு.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது சீரமைக்கப்பட்ட கிழக்கு வாசல் (தாமோதர கிருஷ்ணன்) கோபுரத்தின் முதல் நிலையில் உள்ள கொடுங்கை ஆக.5-ம் தேதி அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த கோபுரம் விரைந்து சீரமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
எனினும், கோயில் கோபுரங்கள் இடிந்து விழுவது ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்படப்போவதை உணர்த்தும் அறிகுறி என்ற கருத்து கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் தெரிவித்திருப்பதாவது; ‘‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அரசு தலையிட்டது. அப்போதே இந்து கோயில்கள் மீது கை வைத்தால் ஆபத்து ஏற்படும் என்று நாம் சொன்னோம். அதன் பாதிப்புகளை தற்போது தெரிகிறது. அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தர்மத்துக்கு விரோதமாக செய்யும் செயல்களுக்கு உரிய எதிர்வினைகள், பாதிப்பு இருக்கும். பொதுவாக கோயில் கோபுரம் இடிந்தாலே அது அரசனுக்கு, அரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது நல்லதல்ல. தவறு செய்பவர்கள் இனியாவது தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஜீயர்.
இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது; ‘‘மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தஞ்சை பெரிய கோயிலுக்கு போனதால் கருணாநிக்கு ஆட்சி பறிபோனது என்றார்கள். அது போன்ற மூடநம்பிக்கைகளை எல்லாம் தாண்டி தான் இன்று திமுக ஆட்சியில் உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் 21 கோபுரங்களில் ஒன்றான கிழக்கு வாசல் கோபுரத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கொடுங்கை (சிறிய சிமென்ட் பூச்சு) தான் விழுந்துள்ளதே தவிர கோபுரமே இடிந்து விழவில்லை. இதனால் ஆட்சியாளர்களுக்கு பாதிப்பு என்றெல்லாம் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை’’ மூட நம்பிக்கைகளை கடந்து தான் திமுக ஆட்சி செய்துக்கொண்டிருக்கின்றது என்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“