திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாக பணியாற்றி வரும் 120 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் ஸ்ரீரங்கம் கோயில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் முறையிட்டனர். தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக் கூடாது என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில், இன்று (30.01.2024) தங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும், கோவில் நிர்வாகத்திற்கு எதிராகவும் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“