ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ஆன்மீக அரசியல் படுத்தும் பாடு?

ஸ்ரீரங்கம் கோவில் நோக்கி ஸ்டாலினை ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல்தான் வர வைத்திருப்பதாக வேறு சிலர் விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. சில ரீயாக்‌ஷன்கள் இங்கே:

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக தலம்! அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் இங்கு வருவதும், அரங்கநாதரை தரிசித்து செல்வதும் வாடிக்கைதான்!

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 22) காலையில் வருகை தந்தது அனைவராலும் கூர்மையாக கவனிக்கப்பட்டது. திருச்சியில் கட்சி பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு வந்த ஸ்டாலினுக்கு, கோயில் வாசலில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. யானை மூலமாக மாலை அணிவித்தும் பட்டர்கள் வரவேற்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சமயம், இங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்தபோதுகூட ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்டாலின் சென்றதில்லை. இப்போது திடீரென அவர் சென்றது விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வருகை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வழக்கமாக ஸ்டாலின் நிகழ்ச்சிகளை வாட்ஸ் அப்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரும் திமுக பிரமுகர்களில் பலர் அவரது ஸ்ரீரங்கம் கோவில் விசிட் தொடர்பான படங்களையோ, தகவலையோ பகிரவில்லை.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின் அங்கு பேசுகையிலோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலோ தனக்கு கோயிலில் அளிக்கப்பட்ட வரவேற்பு பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.

தமிழக பாஜக ஊடக தொடர்பாளரான நாராயணன் தனது ட்விட்டர் பதிவில், ‘ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். வெளியே அரங்கனின் காலடியில் வரம் வேண்டி காத்திருப்பவரை பார்த்தாரா?’ என அங்குள்ள பெரியார் சிலையை நினைவூட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் கோவில் நோக்கி ஸ்டாலினை ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல்தான் வர வைத்திருப்பதாக வேறு சிலர் விமர்சித்துள்ளனர். தனது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க சுக்ர ப்ரீத்தி யாகம் என ஒரு வகை யாகத்திற்காக அவர் வருகை தந்ததாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

 

×Close
×Close