பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி பெருவிழா.
Advertisment
இந்த பெருவிழா இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
எனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது; வைகுண்ட ஏகாதசி பெரு விழாவுக்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
திருக்கோவில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உட்பட 92 கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டு மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.
கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசாரின் உதவியுடன் கூட்ட நெரிசலை கண்காணித்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கொரோனா இருந்ததால் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப் படவில்லை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழா நாட்களில் காவேரி பாலத்தில் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புறக்காவல் நிலைய திறப்பு விழாவில் கோயில் அறநிலையத்துறை அதிகாரி, கோயில் பட்டார்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“